Wednesday, November 7, 2018

நான் ராமன் நீ

நான் ராமன் நீ !

கண்களால் குதறியது
கற்பனைகளில் கலவி
கனவுகளில் புனந்தது
ஒதுக்கிவிட்டால்
நானும் ராமன் தான் !

சதை தின்ற இரவுகளும்
அம்மணமான  பகல்களும்
மௌனமான மனசாட்சியும்
ஒதுக்கிவிட்டால்
நானும் ராமன் தான் !

நீ?

சின்ராசு 
6 Nov 2018

முடியாத தேடல்கள் !

முடியாத தேடல்கள் !

எங்கேயோ எதர்க்காகவோ  தொலைந்து போன நான் !
கனவுகளின் ஆழங்களில்  ஒளிந்து இருந்த நீ !
வெளிறிய முகத்தோடு கரைகடந்த பின்னும்
பதுங்கியிருக்கிறாய் பின்னப்படாத வலைகளில் !

சின்ராசு
6 Nov 2018

Friday, October 26, 2018

மறுபடியும் மரணம் !

சாரக்கட்டைகள் களவாடப்படுகின்றது
யாரென்பது ரகசியம் !

இருண்ட  பகல்கள் அம்மணமான இரவுகள்
தொலைந்து போன தூரங்களில் 
ஒளிந்திருக்கிறது மகிழ்வின் சுவடுகள் !

மாய தருணங்களே இல்லை
உயிர்த்திருக்கும் பொழுதுகளில்
யுகமே  இப்பொழுது !

சந்திப்போம்
மறுபடியும் மரணத்தில் !


சின்ராசு
25 Oct 2018

எப்பொழுது

ஏதாவது செய்யவேண்டும்!

வர்ணங்கள் உணரா கண்களுக்கு
குதறி எறியப்பட்ட  பெண்மைக்கு
உறவுகள்யற்ற உயிர்களுக்கு

கயமையறியா மனதிற்கு
அழிக்கப்பட்ட அடையாளங்களுக்கு
ஒதுக்கப்பட்ட வெள்ளை உடைகளுக்கு

ஏதாவது செய்யவேண்டும்!
எப்பொழுது ?


சின்ராசு
2012

Saturday, June 17, 2017

முகமூடி!

முகமூடியே முகம்
முகமூடியே முகவரி!

சூழலின் சூச்சமத்தில் ஒளிந்திருக்கிறது
அரிதாரத்தின் வர்ணங்களில் படந்திருக்கிறது !

அழித்து பார்த்தாயிற்று
தீ கொண்டு எரித்தும் பார்த்தாயிற்று !
அம்மணமாய் இருக்கும் பொழுதுகளிலும்
அப்பி கொண்டுயிருக்கிறது !

என்று ஏறியது எப்பொழுது இறங்கும்
மரணத்தின் புறவாசலில் விரைத்து இருக்கும்
திரு முகமோ நெசமுகம் !

முகவரியே முகமூடி
முகமே முகமூடி!



சின்ராசு
17 ஜூன் 2017

Sunday, November 24, 2013

புகைப்படம்

புகைப்படம்

நன்றி நண்பா !
பதினைந்து வருட நினைவுகளால் அமிழ்ந்து  போனது நேற்றைய இரவு !

எத்தனையோ நிகழ்வுகள்! வெற்றி, தோல்வி, நட்பு, காதல், பாசம், பயம், காமம், துக்கம், நிஜம், பொய், காற்று, காயம், மழை, மரணம், மௌனம்!
பெற்றவையும் இழந்தைவையும் ஆழி காற்றாய் அறைந்து சென்றது !

நிழற்படத்தில் ராஜா மட்டும் உயிர்ப்பாய் இருக்கிறான். மரணத்தின் புறவாசலில் நான் அவனை சந்திக்ககூடும்!

பதினைந்து வருட பின்னாளில், இன்னும் ஒரு நிழற்படத்தில்
மற்றுமொரு  இரவு கரைந்து போகலாம்!

நினைவுகள் தான் உயிரோ?

Friday, September 21, 2012

மார்பகம்

ஆதார உயிர்ப்பின் ஸ்பரிசமும், தாகமும், வேறு  பரிமாணத்தில்,  தீராமல் தொரத்தி கொண்டே இருக்கின்றதோ !


  

Thursday, September 20, 2012

பட்டாசு #2


பசிக்கு ஒரு தொழில் தான், 
புசிக்க கிடைத்ததோ  கந்தகம்!

எட்டுஅடுக்கு பாதுகாப்பு முதலாளியின் வீட்டிற்கு !
தொழிற்சாலைக்கு தெருநாய்கள் காவல்!

சின்ராசு
20-09-12



 

பட்டாசு !

பட்டாசு !

கண் அவிந்து அம்மா
வாழை இலையில் அப்பா
மார்  எரிந்து அக்கா
பாதி வேக்காட்டில் நான் !

கொளுத்தி வெடித்து
கொண்டாடுங்கள்
திருவிழாக்கள்
மகிழ்வதுற்கே !

வெடித்து சிதறியதில்
உயிர்கள்
கொளுத்தும் திரிகளில்
தீச்சட்டிகள்
பறக்கும் காகிதங்களில்
பாடைகள்
காது  வலிக்கும் சத்தத்தில்
சண்டி செகண்டி !

கொளுத்தி வெடித்து
கொண்டாடுங்கள்
திருவிழாக்கள்
மகிழ்வதுற்கே !


சின்ராசு
20-09-2012

 

Saturday, September 8, 2012

இல்லாத தொலைவு!


இல்லாத தொலைவு !

திருவிழாவில் தொலைந்த
குழந்தையாய் நான் !

முகம் சுவாசித்தும்
திரும்பாத நீ !

திருவிழாக்கள் அழுகின்றன
கோர முகங்களோடு !