Showing posts with label En Kavithai. Show all posts
Showing posts with label En Kavithai. Show all posts

Wednesday, November 7, 2018

முடியாத தேடல்கள் !

முடியாத தேடல்கள் !

எங்கேயோ எதர்க்காகவோ  தொலைந்து போன நான் !
கனவுகளின் ஆழங்களில்  ஒளிந்து இருந்த நீ !
வெளிறிய முகத்தோடு கரைகடந்த பின்னும்
பதுங்கியிருக்கிறாய் பின்னப்படாத வலைகளில் !

சின்ராசு
6 Nov 2018

Friday, October 26, 2018

மறுபடியும் மரணம் !

சாரக்கட்டைகள் களவாடப்படுகின்றது
யாரென்பது ரகசியம் !

இருண்ட  பகல்கள் அம்மணமான இரவுகள்
தொலைந்து போன தூரங்களில் 
ஒளிந்திருக்கிறது மகிழ்வின் சுவடுகள் !

மாய தருணங்களே இல்லை
உயிர்த்திருக்கும் பொழுதுகளில்
யுகமே  இப்பொழுது !

சந்திப்போம்
மறுபடியும் மரணத்தில் !


சின்ராசு
25 Oct 2018

எப்பொழுது

ஏதாவது செய்யவேண்டும்!

வர்ணங்கள் உணரா கண்களுக்கு
குதறி எறியப்பட்ட  பெண்மைக்கு
உறவுகள்யற்ற உயிர்களுக்கு

கயமையறியா மனதிற்கு
அழிக்கப்பட்ட அடையாளங்களுக்கு
ஒதுக்கப்பட்ட வெள்ளை உடைகளுக்கு

ஏதாவது செய்யவேண்டும்!
எப்பொழுது ?


சின்ராசு
2012

Saturday, June 17, 2017

முகமூடி!

முகமூடியே முகம்
முகமூடியே முகவரி!

சூழலின் சூச்சமத்தில் ஒளிந்திருக்கிறது
அரிதாரத்தின் வர்ணங்களில் படந்திருக்கிறது !

அழித்து பார்த்தாயிற்று
தீ கொண்டு எரித்தும் பார்த்தாயிற்று !
அம்மணமாய் இருக்கும் பொழுதுகளிலும்
அப்பி கொண்டுயிருக்கிறது !

என்று ஏறியது எப்பொழுது இறங்கும்
மரணத்தின் புறவாசலில் விரைத்து இருக்கும்
திரு முகமோ நெசமுகம் !

முகவரியே முகமூடி
முகமே முகமூடி!



சின்ராசு
17 ஜூன் 2017

Sunday, November 24, 2013

புகைப்படம்

புகைப்படம்

நன்றி நண்பா !
பதினைந்து வருட நினைவுகளால் அமிழ்ந்து  போனது நேற்றைய இரவு !

எத்தனையோ நிகழ்வுகள்! வெற்றி, தோல்வி, நட்பு, காதல், பாசம், பயம், காமம், துக்கம், நிஜம், பொய், காற்று, காயம், மழை, மரணம், மௌனம்!
பெற்றவையும் இழந்தைவையும் ஆழி காற்றாய் அறைந்து சென்றது !

நிழற்படத்தில் ராஜா மட்டும் உயிர்ப்பாய் இருக்கிறான். மரணத்தின் புறவாசலில் நான் அவனை சந்திக்ககூடும்!

பதினைந்து வருட பின்னாளில், இன்னும் ஒரு நிழற்படத்தில்
மற்றுமொரு  இரவு கரைந்து போகலாம்!

நினைவுகள் தான் உயிரோ?

Friday, September 21, 2012

மார்பகம்

ஆதார உயிர்ப்பின் ஸ்பரிசமும், தாகமும், வேறு  பரிமாணத்தில்,  தீராமல் தொரத்தி கொண்டே இருக்கின்றதோ !


  

Thursday, September 20, 2012

பட்டாசு #2


பசிக்கு ஒரு தொழில் தான், 
புசிக்க கிடைத்ததோ  கந்தகம்!

எட்டுஅடுக்கு பாதுகாப்பு முதலாளியின் வீட்டிற்கு !
தொழிற்சாலைக்கு தெருநாய்கள் காவல்!

சின்ராசு
20-09-12



 

பட்டாசு !

பட்டாசு !

கண் அவிந்து அம்மா
வாழை இலையில் அப்பா
மார்  எரிந்து அக்கா
பாதி வேக்காட்டில் நான் !

கொளுத்தி வெடித்து
கொண்டாடுங்கள்
திருவிழாக்கள்
மகிழ்வதுற்கே !

வெடித்து சிதறியதில்
உயிர்கள்
கொளுத்தும் திரிகளில்
தீச்சட்டிகள்
பறக்கும் காகிதங்களில்
பாடைகள்
காது  வலிக்கும் சத்தத்தில்
சண்டி செகண்டி !

கொளுத்தி வெடித்து
கொண்டாடுங்கள்
திருவிழாக்கள்
மகிழ்வதுற்கே !


சின்ராசு
20-09-2012

 

Saturday, September 8, 2012

இல்லாத தொலைவு!


இல்லாத தொலைவு !

திருவிழாவில் தொலைந்த
குழந்தையாய் நான் !

முகம் சுவாசித்தும்
திரும்பாத நீ !

திருவிழாக்கள் அழுகின்றன
கோர முகங்களோடு !
 

Sunday, September 2, 2012

ஆடுகளம்

ஆடுகளம்

வித்தியாசமான ஆடுகளம் !

புலி ஆடு ஆனது
ஆடு புலி ஆனது !

வேட்டை  தீரவில்லை !

தொலைவில் தெரியும்
பலி யாரென்று !

Tuesday, July 24, 2012

நீ !

நீ !

இழப்பால் வலி 
இன்றில் நேற்று
கரைந்தது !

கால சுழற்சியில்
புதையுண்டது
பல்லாயிரம் !

நிழலாய்
மரணத்தின் மடி வரை
நீ மட்டும் !

Wednesday, November 30, 2011

முடிவுகள் !

அவிழ்க அவிழ்க ஜனிக்கும்
என்றென்றும் முடிவுகள் !

நொடியின் திருப்பத்தில்
இழப்பா சரியா
அவிழ்த்ததும் பிறந்ததும் !

மறுபடி மறுபடி
நொடியில் தொடரும்
முடிவற்ற முடிவுகள் !

Wednesday, October 26, 2011

புரியாத மௌனம்::!


என் நண்பனின் வேதனை என் வார்த்தையில் :::

கண்ணீரின் கரையோரம் தத்தளித்த வினாடிகளில்
தோணியாய் நீ வந்தாய் !

பதின்மவயது முதல் அழுத முன்பகல் இருளும்
வெளிச்சமாயிற்று வார்த்தைகளில் !
அழிந்த நிஜங்கள் அழியாத வலிகள்
நிர்வாணமான என் முகம்
யாருக்கும் தெரியா என் யாவும் பகிர்ந்தேன் !

அன்பளிப்பாய் புரியாத மௌனத்தால்
அறைபட்டேன் !

காலத்தின் சதுரங்க கட்டத்தில்
நானிருக்கும் இடத்தில் நீயும் இருக்கலாம் !
அன்றேனும் என் வலி உன் விழி நீரில்
கரைந்து ஒழுகும் !

உள்ளே அழது
வெளியில் சிரிக்கும் உன் சிரிப்பில்
சிரிப்பும் அழுகும் அன்று !

நான் என்ன துராகம்
செய்தேன் உனக்கு ?
தொலை தூர நட்பாக கூட
பாவிக்காத உன் மாற்றத்திற்கு ?

நீயும் நான் சந்திந்த
மற்றும் ஒரு வேடதாரியா?
அன்பளிப்பாய் புரியாத மௌனத்தால்
அறைபட்டேன் !

காலத்தின் சதுரங்க கட்டத்தில்
நானிருக்கும் இடத்தில் நீயும் இருக்கலாம் !
அன்றேனும் என் வலி உன் விழி நீரில்
கரைந்து ஒழுகும் !

உள்ளே அழது
வெளியில் சிரிக்கும் உன் சிரிப்பில்
சிரிப்பும் அழுகும் அன்று !

நான் என்ன துராகம்
செய்தேன் உனக்கு ?
தொலை தூர நட்பாக கூட
பாவிக்காத உன் மாற்றத்திற்கு ?

நீயும் நான் சந்திந்த
மற்றும் ஒரு வேடதாரியா?

Saturday, July 4, 2009

என் கல்வெட்டு!

அரசனுமில்லை
அவதார புருசனுமில்லை!

விட்டு
செல்ல
அரசாணி மண்டபகங்களோ
அகல்லிகையோ
இல்லை!

வலையின் வீதிகளில்
சில பதிவுகளை தவிர!

- சின்ராசு

Thursday, June 18, 2009

பருவம்

பருவம்
ஒரு சிறகு தான்!

வானில் பறக்க
வழிகள் இல்லாத பொழுது
சிறகே ஒரு சுமை தான்!

-சின்ராசு
1987

Thursday, June 11, 2009

என் மகனாகிய என் தந்தை!

உன் வண்ணம் செறிந்த
கனவுகளுக்கு
தூரிகை நான்!

உன் எண்ணங்களின்
தேவதைகளுக்கு
சிறகு நான்!

உன் மவுனங்களின்
ராஜியர்த்துக்கு
இசை நான்!

உன் சூரிய
புயலின்
கலங்கரை விளக்கம் நான்!

உன் அழகான
ஆன்மாவின்
அரிதாரம் நான்!

உன் பறந்து விரியும்
வாழ்வியலின்
தோனி நான்!

உன் தாயுமான
கருப்பையின்
மகனும் நானே!

- சின்ராசு

Sunday, January 25, 2009

சாணக்கியனா? சத்திரியனா?

நான் நானாக இருத்தல் பலம்.
நான் உருவார்க்கபட்டவன், உதித்தவன் அல்ல!

மரபு அணுக்களும், சூழல் கிரகிச்ச சுவாசமும், அடிப்படை சித்தமும்,
நானாகிய நான் இன்று.

என் நிசம் மாற்ற விருப்பம் இல்லை!
அது நிழல் அல்ல,
இருளுக்கும், ஒளிக்கும் நிறம் மாற !

சத்திரியன் கோபம், அழிக்கும்! அவனையும் சேர்த்து !
உன்மத்தம், உணர்ச்சிகளின் முகவரி அவன்!

சாணக்கியன் கோபம், வஞ்சிக்கும்!
நந்தகுமாரர்களை மட்டும் அல்ல, சந்திர புத்திரர்களையும் !

முடியப்படாத சிரசை விட, கைகெட்டும் அருவாளோடு
வாழ்வை கடந்து செல்வதில் வருத்தம் ஏதும் இல்லை!

படுக்கையறை

மறுபடியும் மறுபடியும் !
அனைவருக்கும் அடுத்தவன் படுக்கையறை பற்றிய
பரிதவிப்பு!

பருவம் கடந்த பின்
கலவி பல பேருக்கு கடமை,
சிலருக்கு அது தவிர்க்க இயலா தாகம்!

அவர் அவர் கலவி அவர்கள் சொந்தம்,
மூடிய சாளரம் வழி
காமம் மேயும் விழிகளுக்கு
யாரும் பொறுப்பாளி யல்ல!

மனதால் ராமனும், கிருஷ்ணன் தான்!
சூழல் அமைந்தால்,
இருளுக்குள் ஒளிந்து கொள்ள,
கோவலன்கள் என்றும் உண்டு !

அடுத்தவன் கழிப்பறையின் நரகல் மட்டுமல்ல,
உங்கள் கொல்லைபுரமும்
கழுவப்படாமல் இருக்கலாம் !

முதலில் அதை கவனியுங்கள் !

அகமும் புறமும்

வேடம் தரித்த
விகடர்கள் பார்த்து
நகைத்தது உண்டு !

வாழ்வின் திருபுகளில்
நானும் விகடனானேன் !

காலம் என்னை பார்த்து
நகைத்தது !

சின்ராசு

Saturday, January 24, 2009

இதுவும் கடந்து செல்லும்!

எத்துனை அழகு இந்த வாழ்க்கை! வித்தியாசமான மனிதர்கள்!

மெல்லிய திரைசீலை விலக்கி, விரிந்திருக்கும் பரந்த உலகம் பார்க்க எத்துனை பயம்!

அனைத்தும் என்னை கடந்து செல்லும்! காதல், பாசம், பயம், காமம், வெற்றி, தோல்வி, துக்கம், நிஜம், பொய், காற்று, காயம், மழை, மௌனம் எல்லாம் கடந்து செல்லும்!

எதற்காக நானாகிய நான் மட்டும், நிகழ்வுகளில் ஏன் சமய வேண்டும்?

பரந்து தழுவும் காற்றாகி கடந்து நிறைவேன்!